நிலாவன்

நிதர்சனப் பட்டியல்

images

 

உன்னுடன் அழைத்துச் சென்றவைகளின் பட்டியல் ஒன்று

தீண்டப்படாமல் உறங்குகிறது நினைவுகளில்….!

 

பாதி உறக்கம்

பார்வையின் ஜீவன்

நடுநிசிக் கனவு

விடுகதையின் கவிதையென

தேர்ந்தெடுத்தப் பட்டியல் அது…!

 

உன்னுடனான அவைகளின் சிநேகம் அல்லது உபயோகம் பற்றி

தகவல்கள் இல்லை யாரிடமும்…..!

 

ஆனாலும்

யூகங்கள் தொடர்கின்றன….!

 

உறங்கும் சூரியனை எழுப்பி

உதிக்கச் சொல்வதாய்…

உலர்ந்து போன உற்சாகத்தை

கவிதையில் நனைப்பதாய்…

மழையின் ஸ்பரிசத்தை

வியர்வையென வெறுப்பதாய்….!

 

ஓசையின்றி பரவும்

இந்த ரகசியங்கள்

தணலும் குளிருமாய் சூழ்கின்றன உயிரை…!

 

நிதர்சனத்தின் கதிர்கள்

தாக்கும் ஒரு பொழுதில்

நீ தரப் போகும்

இன்னொருப் பட்டியல்

என்னவாக இருக்கும்….?!

– நிலாவன்
(more…)

Advertisements

பனியை வீசும் சூரியன்

நேரங்களின் ஒருமித்த ஸ்பரிசங்களுடன்

இணையும் என் ஜீவிதம்

எதிர்ப்பாராத உன் வருகையினால்

தேக்கம் கொண்ட கனவுகளின் கட்டவிழ்த்து

பெருமழைக் கொண்ட பூமியாய்

குளுமையைப் போர்த்திக் கொள்கிறது…..!

 

அனாயசமாய் ஆக்கிரமித்த

சொர்க்கத்தின் மற்றொரு பரிமாணம்

கண்களில் வழிந்தோடுகிறதோவென

துழாவிய பார்வைகளில்

ஸ்தம்பிக்கப் பார்க்கின்றன

இந்த நிமிடத்தின் துடிப்பும்..

அடுத்த நிமிடத்தின் உயிர்ப்பும்..!

 

திரண்டு வழிய முயலும்

ஒரு துளிக் கண்ணீரில்

மிதந்துச் செல்கின்றன

சொல்ல முடியாமற் போன வலிகளும்

பரஸ்பர விசாரணைகளும்…….!

 

பனியை வீசும் சூரியனை

இப்போது மட்டும் பெற்ற இவ்வுலகம்

எனக்கானது அல்ல……

என் சந்தோஷத்திற்கானது……!

 

– நிலாவன்

வார்த்தைகளற்ற கவிதை

நனையும் இரவின் மீது

என் கனவொன்றைப் படர விடுகிறேன்

இன்று இரவின் தொடக்கத்தில்

எழுதாமற் போன கவிதைக்காக….!

பேசும் மொழி மறந்த இதழ் வழி

மௌனமாய் ததும்புகிறது

வார்த்தைகளற்ற கவிதை…!

கையேந்திக் கைப்பற்றுகையில்

என்னைத் தழுவி

திருடிக் கொள்கிறது மழை…!

பிறகொரு நீண்ட கவிதையை

அது வாசிக்கிறது….!

மழையில் கரைந்த மழைக்குப் பின்

நிர்வாணமாகிறேன் வெறுமையின் உடையணிந்து….!

களவு போன கவிதையைத் தேடி

ஒரு கனவில் நீந்துகிறேன்

இரவின் வெளிச்சத் துணைக் கொண்டு’….!

வழித் துணைக்கு

சில வார்த்தைகளோ…..

பல வர்ணனைகளோ….

ஒரு கவிதையோ….

எதுவும் சேர்ந்துக் கொள்ளலாம் என்னோடு…..!

விடியாத வாசலில்

எனக்கான கதவு

திறந்து கொண்டே இருக்கிறது….!

 

– நிலாவன்

பயணம்

அந்தப் பேருந்து நிறுத்தத்தில் அவனைத் தவிர யாருமில்லை. அது ஒரு முக்கிய சாலையில் இருந்தாலும் இரவு 10 மணியாவதால் தனியாக நிற்பதற்கு யாருக்கும் பயம் இருக்கும். அதுவும் கையில் பெரிய பையுடன் நிற்பது என்பது சற்று சிக்கல் தான். இன்னும் சிறிது நேரம் காத்திருப்பதா இல்லை அறைக்கு சென்று விடுவதா என்று அவன் யோசித்தான். சாலையில் ஆட்டோக்களும் இரு சக்கர வாகனங்களும் அதிகமாக ஓடின. ஆள் நடமாட்டம் அதிகமில்லை. அப்போது ஒரு ஆட்டோ அவனருகே வந்து நின்றது.

”தம்பி எங்க கோயம்பேடா….? 2 பேர் இருக்காங்க… நீயும் சேர்ந்துக்க நூருவா கொடு…”

”இல்லங்க… பஸ் வரும். அதுல போயிக்கிறேன்.”

”அர மணி நேரத்துக்கு ஒரு பஸ்தான் வரும். கூட்டமா இருக்கும். ஆட்டோல சீக்கிரமா போயிடலாம்” ஒரு தேர்ந்த வியாபாரி தன் பொருளை விற்பதற்கு சொல்லும் லாவகத்துடன் சவாரிக்காக அந்த ஆட்டோ ஒட்டுநர் சொன்னார்.

”பரவால்ல.. நீங்க போயிட்டு வாங்க”

ஆட்டோ சென்று விட்டது. மீண்டும் தனியாய் நின்றான். போயிருக்கலாமோ என யோசித்தான். 15 நிமிடம் கழித்து பஸ் வந்தது. பின் வாசலில் ஏறினான். கூட்டம் அதிகமாக இருந்தது. பையுடன் சற்று சிரமப்பட்டு உள்ளே சென்றான். சில முகங்கள் வெறுப்பாக பார்த்தன. கால்களில் மிதித்தும் பையால் இடித்தும் சற்று தடுமாறினான். ஒரு வழியாக நிற்பதற்கு இடம் கிடைத்தது. சிறிது ஆசுவாசமானான். ஆட்டோல போயிருந்தா 90 ரூபா நஷ்டமாயிருக்கும். என்ன சிரமப் படாம போயிருக்கலாம் என நினைத்தான். அடுத்தப் பேருந்து நிறுத்தத்தில் இன்னும் சில பேர் ஏறினார்கள்.

சிறிது தூரம் சென்றதும் பஸ் மீண்டும் நின்றது. இங்கே நிறுத்தம் ஏதும் கிடையாதே என யோசித்தான். பிறகு தான் பிடிப்பட்டது நடத்துனர் பயணச்சீட்டு கொடுப்பதற்காக நிறுத்தி வைத்திருக்கிறார் என்று. மீண்டும் பொறுமையிழந்தான். இதெல்லாம் ஒவ்வொரு முறையும் சாதாரண நிகழ்வென்றாலும் பொறுமையாய் இருக்க முடிவதில்லை.

ஒரு வழியாக ஒண்ணரை மணி நேரப் பயணத்திற்கு பின் பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து சேர்ந்தது.

ஊருக்கு செல்வது சிரமம் என்பதை நுழைவாயில் செல்லும் முன்பே  உணர்ந்தான். எங்கெங்கும் மனிதர்கள் நடந்துக் கொண்டிருந்தார்கள். தன் ஊரின் நடை மேடை நோக்கி சென்றான். வரிசையாக பேருந்து நின்றிருந்தாலும் எல்லாம் நிரம்பி இருந்தது. அடுத்த பேருந்து வராதா என அனைவரின் கண்களும் அலைபாய்ந்துக் கொண்டிருந்தன. நிறைய பேர் நடை மேடை இருக்கை கிடைக்காமல் நின்றுக் கொண்டிருந்தார்கள். காலி தேநீர் கோப்பையோடு ஒருவன் எழுந்திருத்த போது, அவனுக்கு இருக்கை கிடைத்தது.

எங்கும் கூச்சலும் சத்தமுமாக இருந்தது. எல்லா கடைகளுக்கும் வியாபாரம் அமோகமாக நடந்தது. தேநீர் குடிக்கலாமென நினைத்த மறுநொடியே, வேண்டாம் என முடிவெடுத்தான். நகரப் பேருந்தில் நின்றுக் கொண்டே வந்தது அயற்சியாய் இருந்தது அவனுக்கு. மீண்டும் இருக்கை கிடைப்பது எளிதல்ல என்பதால் எழுந்திருக்கவில்லை.

திடீரென ஒரு கும்பல் ஒடிய திசையைப் பார்த்தால் அங்கே ஒரு பேருந்து எந்தப் பெயர் பலகையும் இல்லாமல் வந்துக் கொண்டிருந்தது. மேலும் நகர முடியாமல் ஒட்டுநர் நடு சாலையிலேயே நிறுத்தி விட்டார். சில பல கோப உரையாடலுக்குப் பின் நடத்துனரும் ஒட்டுநரும் பேருந்தை வலது ஒரமாக நிறுத்தி விட்டு சென்று விட்டனர்.

அங்கிருந்து வந்த சிலர் அதைப் பற்றி பேசிக் கொண்டனர்.

”இவனுங்களுக்கு இதே வேலை… எப்படியும் 30 பேர் தான் ஏறனும். இங்க நிப்பாட்டினா ஏறி உக்காரவாங்கள்ல…”

”ஜனங்க கஷ்டத்தப் பத்தி கவலப்படமாட்டாங்கப்பா… எதுர்த்தாப்ல தெரியுதுல ஒரு ஊரு…. அங்க அமைச்சர் நேரா வந்து இப்ப நிக்குறாரு… அவரு வந்து நாலு அஞ்சு பஸ் ஏற்பாடு செஞ்சிருக்காரு…”

”இப்படி எல்லா ஊரு எம் எல் ஏவும் மினிஸ்டரும் வரணும்னா எப்படி…?’

”அத பத்தியெல்லாம் யாருய்யா நினைக்கிறா…? நமக்கு சீட் கிடைச்சா போதுன்னு தான் அவனவன் நினைக்கிறான்…”

உரையாடல் தொடர்ந்தது. இதைக் கேட்டு அவனுக்கு சிரிப்பு வந்தது. வெளிக் காட்டவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் அவன் ஞாபகத்தில் இருந்தது.

அப்போது தான் பதவியேற்றுக் கொண்ட மாநகர காவல்துறை ஆணையர் பேருந்து நிலையத்தை பார்வையிட வந்தார். அன்றும் கூட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்து கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள் மக்கள். ஒரு பத்து, பதினைந்து பேர் அவருடன் வந்திருந்தனர்.

அவனது நடை மேடை அருகே வந்ததும், கூட்டத்தில் ஒருவர்

”இவ்வளவு நேரமாகியும் பஸ்ஸே வரல சார்.. ஏற்பாடு செய்யச் சொல்லுங்க சார்” என்றார். அவருக்குப் பின் பெரிய கூட்டம் கூடியது.

ஆணையர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனாலும் தனக்குப் பின்னே வந்த காவலரிடம் எல்லோரிடமும் குறையைக் கேட்டு வருமாரு ஆணையிட்டார். எல்லோரும் ஆர்வமுடன் சொன்னார்கள். அவனும் தான். பிறகு எல்லா காவலர்களும் சென்றனர்.

இரண்டு மாதமாகிறது எதுவும் மாறவில்லை இதுவரை. அதனால் யார் என்ன பேசிக் கொண்டாலும் மனதுக்குள் சிரித்துக் கொள்வான்.

இரண்டு மூன்று பேருந்துகள் சென்று விட்டன. அதற்குப் பகரமாக பேருந்துகள் வந்தாலும், கதவருகே கூட அவனால் போக முடியவில்லை. நல்லிரவு தாண்டியும் கூட்டம் குறைந்தபாடில்லை. ஒரு தேநீர் குடித்த பின்பு மிகுந்த நாற்றத்துடன் வரவேற்ற கழிவறைக்குச் சென்றான். யாரும் நாற்றத்தை பொருட்படுத்தவில்லை. மனித உபாதைகளைக் கழிப்பது  இவையெல்லாவற்றையும் விட முக்கியம் என நினைத்தான்.

கழிவறைக்கு வெளியே வந்த போது தான் கவனித்தான். தூரத்தில் ஒரு குழந்தை அசுத்தமான ஒரு இடத்தில் உட்கார்த்து விளையாடிக் கொண்டிருந்தது. அக்குழந்தையைச் சுற்றியும் மனிதர்கள் கடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள். அக்குழந்தையுடன் உள்ளவர்கள் யாரும் அருகில் நிற்பதாக அவனுக்கு தோன்றவில்லை.

போய் அந்தக் குழந்தைக்கு உதவி செய்யலாமா…. தூரத்திலிருந்து யாராவது உரிமையானவர்கள் வந்தால்…. நமக்கு நேரமாகிறதே ஊருக்கு செல்ல…. பேருந்து கிடைப்பதற்கே வழியில்லை இதில் அடுத்தவர்க்கு உதவியா….. என பல கேள்விகள் அவன் மனதுக்குள்.

ஆனாலும் அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் இவையெல்லாம் மறைந்தன. அருகில் சென்று அக்குழந்தையை எழுப்பி விட்டான். இதுவரை யாரும் அருகே வரவில்லை. குழந்தை தவறி வந்துவிட்டது உறுதியானது. அருகிலிருந்த தண்ணீர்க் குழாய்க்கு அருகில் அழைத்துச் சென்று கையையும் உடையையும் சுத்தம் செய்தான். குழந்தை தண்ணீர்ப் பட்டதும் குதூகலித்தது. அதன் சிரிப்பு அவனை ஈர்த்தது.

”ஒம்பேர் என்ன..?“

குழந்தை மறுபடியும் சிரித்தது. ஆக சரியாக பேசத் தெரியவில்லை என நினைத்தான். எப்படி இந்தக் குழந்தையை உரியவரிடம் சேர்ப்பது என நினைத்தவனுக்கு சட்டென காவலர்கள் ஞாபகம் வந்தது. குழந்தையைத் தூக்கினான். அதுவரை சிரித்து விளையாடிய குழந்தை இப்போது அழ ஆரம்பித்தது. அவன் நடக்க ஆரம்பித்ததும் அழுதபடியே கீழே இறங்க முற்பட்டது. பேருந்து நிலைய பேரிரைச்சலில் குழந்தையின் அழுகை  அமுங்கியது.

சிறிது தூரத்தில் பெண் காவலர் ஒருவர் நிற்பதை கண்ட அவன் அவரருகே சென்றான். விபரம் சொல்லி குழந்தையை அவரிடம் விட்டுவிட்டு நகர முற்பட்டான்.

” இருங்க.. உரியவங்க வந்தோன போங்க”

”மேடம்… எனக்கு லேட் ஆகுது… நான் போகணும்”

”அப்புறம் ஏன் அழைச்சுட்டு வந்தீங்க….? எங்கேயாவது இருக்கிற பிரச்சினையெல்லாம் எங்கள்ட்ட தள்ளிட்டு நீங்க போயிடுவீங்களா…? நில்லுங்க…” அதட்டினார்.

இத நமக்கு தேவைதான் என நொந்துக் கொண்டான். அந்தக் காவலர் யாருக்கோ ஃபோன் செய்து பேசிக் கொண்டிருந்தார். தரையில் இறங்கியவுடனேயே அழுகையை நிறுத்தியிருந்தது குழந்தை. தன் கற்பனை மனிதர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது. பதினைந்து நிமிடமாகியும் யாவரும் வரவில்லை.

”மேடம்… எனக்கு ரொம்ப லேட் ஆகுது… ப்ளீஸ் என்ன போக விடுங்க”

”இருப்பா…  என்னோட டூட்டில இருக்கறவரு வரட்டும்…. அவர் வந்தவுடனே கொழந்தய அழைச்சுட்டு கன்ட்ரோல் ரூமுக்கு நாங்க போறோம், நீ ஒன் ஊருக்கு போலாம்”

என்ன சொல்வதென்று தெரியவில்லை. மீண்டும் காத்திருந்தான். மற்றொரு காவலர் சிறிது நேரம் கழித்து வந்தார்.

”இந்த கொழந்த தான். மைக்ல அன்னௌன்ஸ் பண்ண சொல்லணும்”

”யாரு அழைச்சிட்டு வந்தா?”

”அந்தோ அவருதான்”

”தேங்க்ஸ் பா…. இங்க எல்லாரும் கண்டுக்காம போவாங்க… ஒன்னப் போல கொஞ்சம் பேருதான் இப்படி ஹெல்ப் பண்ணுவாங்க…” அவர் கைக்கொடுத்தார்.

இதுவரை இருந்த மனநிலைக்கு இந்தப் பேச்சு சற்று ஆறுதலளித்தது. சந்தோஷமாக அங்கிருந்து கிளம்பினான். தன் ஊருக்கான நடைமேடைக்கு மறுபடியும் வந்த போது கூட்டம் குறைந்திருந்தது. ஆனால் பேருந்து எதுவும் இல்லை.

”ஏங்க… பஸ் ஏதும் இப்ப இல்லீங்களா?”

”எல்லா பஸ்ஸும் போயிடுச்சாம்… இனிமே 3 மணிக்கு மேலத்தானாம்” அருகில் நின்றவரிடம் பதில் வாங்கினான்.

3 மணிக்கு மேல பஸ் ஏறினா மதியம் தான் போக முடியும். அதுக்கு நாளை இரவு போகலாம் என அங்கலாய்த்தபடியே முடிவெடுத்தான். ஒரு சலிப்புடன் பேருந்து நிலைய நுழைவு வாசலுக்கு வெளியே வந்தான். நகரப் பேருந்து நிற்குமிடத்தில் தனது பகுதிக்கு செல்லும் பேருந்து ”இரவு சேவை” பலகையுடன் தயாராக இருந்தது. ஏறி அமர்ந்தான்.

பாதி இரவு வீணாயிடுச்சு… ஒழுங்கா தூங்கி எந்திரிச்சு விடியக்காலைல கிளம்பியிருக்கலாம். இல்லையே… வீணாகலையே…. அந்தக் குழந்தைக்கு ஹெல்ப் பண்ணியிருக்கோமே… அதுக்காகத் தான் இவ்வளவு சிரமப்பட்டு வந்துருக்கோமோ….

அப்போது தான் ஞாபகம் வந்தது.

கிளம்பும் போது அந்தக் குழந்தையை பார்க்கவே இல்லையே… சே…. ஒரு பாராட்டு கிடைச்ச உடனே எல்லாமே மறந்துடுது… அந்தக் குழந்தை நம்மள பார்த்திருக்குமா…? கூப்டிருக்குமா…?

அவமானமாக உணர்ந்தான்.

இப்போது மற்றொரு கவலை அவனை ஆக்கிரமித்தது.

அந்தக் குழந்தை உரியவர்களிடம் சேர்ந்திருக்குமா…..?

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

நிலாவன் – moonlitiqbal@gmail.com

வலைப்பக்கத்தில் எனது பயணம்…….

IMG-20130920-WA0001

ஏழாம் வகுப்பு படிக்கும் போது எனது எதிர் வீட்டு நண்பன் (உறவு முறையும் கூட) வீட்டில் பழைய குறிப்பேடுகள் கிடைத்தன. அதில் அவனுடைய மாமா எழுதிய சில கவிதைகளை (அப்போது அப்படித்தான் தோன்றின) படிக்க நேர்ந்தது. அவை புதிய அனுபவத்தையும், அது போல நானும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் தந்தன. அதன் பிறகு சில வாக்கியங்களை நானாக எழுத ஆரம்பித்தேன். அப்படி ஆரம்பித்தது தான் என் எழுத்து. அந்த கவிதைகளிலிருந்து சிலவற்றை சுட்டு, அதையும் நான் எழுதியதாகக் காட்டியது தனிக்கதை.

அப்புறம் வயசுக்கேற்ற கவிதைகள் வந்து உட்கார்ந்து கொண்டன. மறுபடியும் சொல்கிறேன் அவை கவிதைகள் என்று அப்போது தோன்றின. ஆனால் அவற்றையெல்லாம் யாரிடம் காண்பிப்பது என்பது விளங்கவில்லை. யாருக்கு கவிதை புடிக்கும் என்று யாருக்குத் தெரியும். இப்படியே சில வருஷங்கள் போயின. ஆனால் தொடர்ந்து எழுதி வைத்துக் கொண்டிருந்தேன். நானே படித்து நானே சிலாகித்துக் கொண்டிருப்பேன்.

நாட்கள் ஆக ஆக நிறைய காகிதங்கள் சேர்ந்தன. பின்னர் அதையெல்லாம் குறிப்பேடுகளில் எழுத ஆரம்பித்தேன். எழுதுவது சரி… படிக்க ஆள் வேண்டுமே….?! அப்படியே கிடைத்தாலும் ஒருத்தர் அல்லது ரெண்டு பேர் தானே கிடைப்பாங்க…

11ம் வகுப்பு படிக்கும் போது “பொருளியல்” வகுப்பெடுக்கும் ஆசிரியர் எங்கள் பேட்ஜோடு ஓய்வுப் பெற்றார். அவருக்கு பிரிவுபச்சார விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது தான் அந்த திருப்பம் நிகழ்ந்தது. யாரோ என் தமிழாசிரியரிடம் சொல்லி, அவர் என்னை கூப்பிட்டு அந்த ஆசிரியர் பிரிவைப் பற்றி ஒரு கவிதை (சரி சரி வாழ்த்து) எழுதச் சொன்னார். நானும் எழுதினேன். அவர் மிகவும் ஒல்லியாக இருப்பார். அதனால்

” பொருளாதாரத்தை மாணவர்களுக்கு

போதிக்க வேண்’டும் என்ற லட்சியத்தால்

துரும்பாக இளைத்து விட்டவரே….”

என எழுதினேன். அதை என் தமிழாசிரியர் ” துரும்பாக இளைத்து விட்ட கரும்பினும் இனியவரே…!’ அப்படீனு மாத்தினார். இப்படியாக சில திருத்தங்களுக்கு பிறகு கவிதை அல்லது வாழ்த்து தயாரானது.

 

பிரிவுபச்சார விழாவில் மேலும் திருப்பமாக என்னை  முதலில் அழைத்து வாசிக்க சொன்னார் தமிழாசிரியர். எதிர்ப்பார்த்தது போலவே குறிப்பிட்ட அந்த வரிகளுக்கு எல்லோரும் ரசித்து சிரித்தனர். மேலும் தலைமையாசிரியர் முதற்கொணடு என்னை கண்டுக் கொள்ள ஏதுவாயின அந்த வரிகள். ஆக இப்போது ஒரு 60 பேருக்கு நம்மையும் நம் எழுத்தைப் பற்றியும் தெரியும் என்ற நினைப்பு ஒரு சந்தோஷத்தைக் கொடுத்தது. ஒருமுறை பள்ளி முடிந்து போகும் போது தலைமையாசிரியர் என்னைக் கூப்பிட்டு ”உம் பேரு என்ன சொன்ன….?’ என்று கேட்டார். சந்தோஷம் தாளவில்லை.

சரி… 12ம் வகுப்புக்கு பின்னர் மீண்டும் ஜீரோ ஆனேன். ஆம் எல்லோரும் தான் பிரிந்து விட்டார்களே….! இப்போதைய ட்வீட்டர் யுகப்படி மீண்டும் ஜீரோ  ஃபாலோயர்ஸ். அப்புறம் கல்லூரி அலுவலகம் என மாறி அவற்றினூடே எழுதினாலும் சிலர் தான் அவற்றை படிக்க முடிந்தது. அப்புறம் பல வருஷங்களுக்குப் பின் Blog-கள் அறிமுகமாயின. ஆனால் எனக்கு Blog எழுத ஆர்வம் இல்லை. ஏனென்றால் அவற்றிற்கு கணிணி, இணையம் போன்றவை தேவை என்பதால் அவையெல்லாம் இல்லாத நாம் எப்படி எழுதுவது என விட்டு விட்டேன்.

அப்புறம் பேஸ்புக், ட்விட்டர் வந்த பிறகு எழுத வாய்ப்பு ஏற்பட்டது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தான் என் தொடர்பில் இருந்தார்கள். அதனால் ஒரு தயக்கம் ஏற்பட்டது நம்மை எவ்வாறு  நினைப்பார்கள் என்று. என்னுடைய தயக்கத்தை ட்விட்டர் நீக்கியது. அதில் நிறைய பேர் Blog வைத்திருந்தனர். அவர்கள் நினைத்ததை அதில் எழுதியிருந்தனர் அருமையாகவே. அதன் பிறகு தான் எனக்கு Blog எழுதும் ஆர்வம் வந்தது.

இது வெறும் கவன ஈர்ப்புக்காக அல்லாமல் தினமும் சில மணித்துளிகள் இதற்காக செலவிடவாவது இதை செய்ய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது. அது மட்டுமல்ல, இது நமது களம் என்ற சுதந்திரம் ஒரு திருப்தியை எனக்குக் கொடுக்கிறது.

 

ஆகவே நண்பர்களே, எனது பயணத்தை இதோ தொடங்கி விட்டேன். இதில் உங்களது விமர்சனங்கள், எதிர்வினைகள் மற்றும் ஊக்கங்களை எதிர்ப்பார்க்கிறேன். இணையுங்கள்; சேர்ந்து பயணிப்போம்……